பரபரப்பு: உத்தவ் தாக்கரேவுடன் திரிணமூல் தலைவர் திடீர் ஆலோசனை!

மும்பைியில் உத்தவ் தாக்கரேவை சந்தித்த திரிணமூல் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி (வலது)
மும்பைியில் உத்தவ் தாக்கரேவை சந்தித்த திரிணமூல் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி (வலது)

திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, மும்பையில் சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரேவை நேற்று இரவு சந்தித்து பேசினார்.

மக்களவைத் தேர்தலில் 293 இடங்களுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இச்சூழலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கடந்த 5ம் தேதி மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்
டெல்லியில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்

முன்னதாக இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்க முயற்சித்து வருவதாக தகவல் வெளியானபோது, கூட்டணி கட்சிகளில் ஒன்றான மகாராஷ்டிராவின் சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தியை பிரதமராக தேர்வு செய்ய முயற்சிப்போம் என தெரிவித்திருந்தார். ஆனால், திடீரென டெல்லியில் 5ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை.

இச்சூழலில், மும்பையில் உத்தவ் தாக்கரேவின் இல்லத்துக்கு, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு பிரதான கட்சியான மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி நேற்று இரவு, உத்தவ் தாக்கரேவின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு பாந்த்ராவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் இல்லமான 'மாதோஸ்ரீ' யில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. ஆனால் இந்த சந்திப்பின்போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து இரு தரப்பிலும் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆலோசனைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் அபிஷேக் பானர்ஜி எதுவும் கூறாமல் சென்றுவிட்டார். அவருடன் திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் உடனிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா (உத்தவ் பிரிவு) எம்பி- சஞ்சய் ராவத் கூறுகையில், “உத்தவ் தாக்கரே கடந்த 5ம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லாததால், திரிணமூல் காங்கிரஸ் தரப்பினர் அவரை சந்திக்க வந்தனர்" என்றார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் பிரிவு) சார்பில் முறையே 29 மற்றும் 9 எம்பி-க்கள்வெற்றி பெற்றுள்ளனர். இரு கட்சிகளும் பாஜக எதிர்ப்பு அணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in