தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே, தமிழகத்தில் முதல் பழங்குடியின சிவில் நீதிபதியாகும் ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. 23 வயதே ஆன இவர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டித் தேர்வினை எழுதி வெற்றிப் பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி எனும் பெருமையை ஸ்ரீபதி பெற்றுள்ளார். கல்வி எனும் ஒற்றை ஆயுதம் மூலம் எளிய பிண்ணியில் இருந்து கடும் போராட்டத்திற்கு பிறகு நீதிபதியாகி உள்ள ஸ்ரீபதியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது திராவிட மாடல் அரசின் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும் ஸ்ரீபதியை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்வழி கல்வி கற்று, அயராத உழைப்பினாலும், கடும் முயற்சியாலும் உரிமையியல் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை - புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின பெண்ணான சகோதரி ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள்.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை என்ற நம் திராவிட மாடல் அரசின் அரசாணையின் மூலமாக சகோதரி ஸ்ரீபதி உரிமையியல் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். குறிப்பாக, குழந்தைப் பேறுக்குப் பின் அடுத்த இரண்டே தினங்களில் தேர்வு என்ற கடினமான சூழலிலும், உயிரைப் பணயம் வைத்து தேர்வுக்காக நெடுந்தூரம் பயணித்த அவரது லட்சிய உறுதி பாராட்டுக்குரியது. கல்வி ஒன்றே அழியாத சொத்து என்கிற வகையில் மற்றோருக்கு உதாரணமாக திகழ்ந்துள்ள சகோதரி ஸ்ரீபதியின் கனவுகள் வெல்லட்டும்” என்று அவர் பாராட்டியுள்ளார்.
மேலும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் இளம் நீதிபதி ஸ்ரீபதியை பாராட்டி, "கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை" எனும் திருக்குறளை மேற்கொள் காட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். இவர்களைப் போல, நீதிபதி ஸ்ரீபதிக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!
அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!
நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!
‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!
கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!