மாமல்லபுரத்தை இன்று இலவசமாக சுற்றிப்பார்க்கலாம்!
உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைக் காண கட்டணம் வசூலிக்கப்படாது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ஐந்துரதம், கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம், அர்ஜுனன் தபசு ஆகிய சிற்பங்கள் உள்ளன.
இவற்றை கண்டு ரசிப்பதற்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால், மாமல்லபுரம் சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மேலும், சுற்றுலாவை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் மாமல்லபுரம் உள்ளது.

பல்லவர் காலத்தில் பிரபலமாக இருந்த பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கும் பழமையான கோயிலை உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த பாறைக் கோயில்கள் தென்னிந்தியாவின் புனிதமான இடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு தொல்லியம் துறை கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் நுழைவுக்கட்டணம் ஏதுமின்றி சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.