சபரிமலையில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் ரோப் கார் வசதி; மத்திய வன அமைச்சகம் அனுமதி!

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலையில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் 2.90 கி.மீ. தூரத்திற்கு பம்பையில் இருந்து பூஜை பொருட்களை கொண்டு செல்ல ரோப் கார் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய வன அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

சபரிமலை கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை, மகரஜோதி சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து ஐயப்பனை தரிசிக்கின்றனர். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு தரிசனத்திற்கு பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும். சன்னிதானத்திற்கு தேவையான பூஜை, இதர பொருள்களை டிராக்டரில் கொண்டு செல்வதில் கோயில் நிர்வாகத்திற்கு இடர்பாடுகள் உள்ளது. எனவே பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு 2.90 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.

ஐயப்ப பக்தர்கள் (கோப்பு படம்)
ஐயப்ப பக்தர்கள் (கோப்பு படம்)

இதற்கென வனத்துறை நிலம் 1.5 ஏக்கர் மட்டுமே தேவைப்படுகிறது. அதற்கு ஈடாக ஏற்கனவே தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சின்னக்கானலில் உள்ள வருவாய்த்துறை நிலம் 4.53 எக்டேரை வனத்துறைக்கு வழங்க தேவசம்போர்டு முன்வந்துள்ளது. ரோப்கார் செல்லும் பாதையில் 5 இடங்களில் 40 மீ., முதல் 70 மீ., உயரத்திற்கு டவர்கள் அமைக்கப்படுகிறது. இதனால் மொத்தம் 20 மரங்கள் மட்டுமே வெட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மத்திய வனம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சகம்
மத்திய வனம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சகம்

கேரள அரசின் மூலம் தேவசம் போர்டு தந்துள்ள இந்த திட்டத்திற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. ரூ.80 கோடியில் அமைக்கப்படும் ரோப் கார் வசதி பக்தர்கள் பயன்பாட்டிற்கு அல்ல. பொருள்களை கொண்டு செல்ல மட்டுமேயாகும். இதற்கான கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in