ஆசிரியர்களுக்கு பாதபூஜையுடன் வணங்கி விருது... நன்றிகடன் செலுத்திய முன்னாள் மாணவர்!

ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்திய முன்னாள் மாணவர்
ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்திய முன்னாள் மாணவர் HR Ferncrystal

தனக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை வீட்டிற்கு அழைத்துவந்து, பாதபூஜை செய்து வணங்கி, விருது வழங்கி முன்னாள் மாணவர் நன்றிகடன் செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்திற்கு முந்தைய இடத்தை பெற்றிருப்பவர்கள் கல்வியும், ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் ஆசிரியர்கள் தான். இப்படியாக தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை மறவாமல் வீட்டிற்கு அழைத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் முன்னாள் மாணவர் ஒருவர். மதுரை மாநகர் சூர்யாநகர் மீனாட்சியம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்குமரன் (48). தொழிலதிபரான இவர் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

ஆசிரயர்களை கவுரவித்த இளங்குமரன்
ஆசிரயர்களை கவுரவித்த இளங்குமரன்

இந்நிலையில், இளங்குமரன் தனது 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தான் வாழ்நாளில் கல்வி பயின்ற 3 மேற்பட்ட பள்ளிகளில் தனக்கு ஆரம்ப கல்வி தொடங்கி உயர்கல்வி வரை பாடம் கற்றுதந்த ஆசிரியர்களின் ஆசிகளை பெற வேண்டும் என எண்ணினார். இதற்காக தனக்கு பாடம் கற்றுக்கொடுத்த 13 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தனது பிறந்த நாளில் அவரது வீட்டிற்கு அழைத்துவந்தார். ஒவ்வொரு ஆசிரியரையும் சந்தானமாலை அணிவித்து வரவேற்ற இளங்குமரன், வீட்டிற்குள் அழைத்துவந்து அமரவைத்து பாதபூஜை செய்து வணங்கி வாழ்த்துபெற்றார்.

பாதைபூஜை செய்த இளங்குமரன்
பாதைபூஜை செய்த இளங்குமரன் HR Ferncrystal

இதனைத்தொடர்ந்து தனக்கு கல்வி கற்றுக்கொடுத்து தன்னை வாழ்வில் மேம்பட வைத்ததற்கு நன்றி தெரிவித்து புத்தாடை வழங்கி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். பதிலுக்கு தங்கல் முன்னாள் மாணவர் இளங்குமரனை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வாழ்த்தினர். தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களது பெயர்களுடன் ’உபாத்தியார் விருதுகளை’ வழங்கினார். இதனையடுத்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனது கையால் பிரியாணி பரிமாறி உபசரித்து, பள்ளிப்பருவத்தில் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தார். அப்போது இளங்குமரனுடன் அவரது மனைவி விசாலாட்சியும் உடனிருந்து ஆசிரியர்களை உபசரித்து ஆசி பெற்றார். இதில் ஒரு ஆசிரியை இளங்குமரனின் தந்தைக்கும் கல்வி கற்றுக்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தன்னுடைய மாணவன் சமூகத்தில் நல்ல நிலைமைக்கு வந்த பின்னர் தங்களை மறக்காமல் தேடி அழைத்துவந்து நன்றி தெரிவித்து ஆசி பெற்றது எங்களை ஈடில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எங்களது மாணவன் எப்போதும் அனைவருக்கும் உதவும் மனப்பான்மையோடு நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்" என்று ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in