சென்னையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த உடற்பயிற்சி ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வியாசர்பாடி கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், அதிகமாக வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை உட்கொண்டு மயக்க நிலையில் இருந்தார். இதையடுத்து அலறியடித்தப்படியே மாணவியின் பெற்றோர், சிறுமியை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விசாரணையில், தனது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ஆல்பின் பிரேம்குமார் (26) என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி அழுதபடியே கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது இது குறித்து புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், வியாசர்பாடி சென்பால் தெருவைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆசிரியர் ஆல்பின் பிரேம்குமாரை(26) கைது செய்தனர். அவர், கடந்த சில மாதங்களாகவே சிறுமியுடன் செல்போனில், காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தைகள் பேசி, பள்ளியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர், எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ வழக்கில் ஆல்பின் பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து சிறுமி மனஅழுத்தம் காரணமாக, அதிக மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.