
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் தனியார் பள்ளியில், எல்.கே.ஜி மாணவனை மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு ஆசிரியர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வி.கோட்டா சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், கோட்டைச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்த அருள் - தீபம் தம்பதியின் 3 வயது மகன் விக்ரம் அருள் எல்கேஜி படித்து வருகிறான். இந்நிலையில் வழக்கம்போல் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தையை பார்த்த பெற்றோர் அவனது மூக்கில் ரத்தம் வந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கேட்டதற்கு, வகுப்பு ஆசிரியர் அடித்ததால் மூக்கில் ரத்தம் வந்ததாக சிறுவன் விக்ரம் அருள் கூறியுள்ளான். இதையடுத்து சிறுவனை உடனடியாக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிறுவனின் உறவினர்கள் பலரும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பள்ளியில் நடந்தது குறித்து சிறுவனிடம் கேட்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, பள்ளியில் இதுபோன்று தனது மகனை ஆசிரியர் தாக்கியதாகவும், அப்போது, இனிமேல் தயவு செய்து அடிக்க வேண்டாம் என தாய் தீபம் கூறிவிட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் தனது மகனை அடித்துள்ள நிலையில், அந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.