அமித் ஷா சந்திப்பில் நடந்தது இதுதான்... தமிழிசை தன்னிலை விளக்கம்

ஆந்திராவில் தமிழிசை - அமித் ஷா
ஆந்திராவில் தமிழிசை - அமித் ஷா
Updated on
2 min read

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழா மேடையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்திரராஜனை கண்டித்ததாக வெளியான வீடியோ மற்றும் செய்திகளுக்கு தாமதமாக தமிழிசை தன்னிலை விளக்கம் தந்திருக்கிறார்.

பாஜக தமிழகத் தலைவராக இருந்துவந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இடையில் புதுவை ஆளுநராகவும் பொறுப்பு வகித்தவர், 2024 மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மீண்டும் பாஜகவில் இணைந்தார். தென்சென்னை பாஜக வேட்பாளராகவும் களமிறங்கினார். ஆனால் எதிர்த்துப் போட்டியிட்டவரும் சிட்டிங் எம்பியுமான திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனிடம் தோல்வி அடைந்தார்.

தமிழிசை செளந்தரராஜன் - அண்ணாமலை
தமிழிசை செளந்தரராஜன் - அண்ணாமலை

அடுத்து மாநில அரசியலில் தீவிரமாகும் முன்னேற்பாட்டில் இறங்கினார். எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி உட்கட்சி எதிரிகளையும் இதன் பொருட்டு கண்டித்தார். தனக்கு எதிராக செயல்படும் தமிழக பாஜக இணையவாசிகளையும் கண்டித்தார். அதன் பின்னர் தற்போதைய தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அவருடைய கருத்துகள் அமைந்தன. அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னரே தமிழக பாஜகவின் குற்றப் பின்னணி உடையவர்கள் அதிகம் இணைந்ததாக அவர் விமர்சித்ததை அடுத்து அண்ணாமலை எதிர்ப்பாளர்கள் தமிழிசை பின்னால் திரண்டனர்.

மேலும் அதிமுக உடனான கூட்டணி நீடிக்காதது தொடர்பான தமிழிசையின் விமர்சனம், தேசியத் தலைமையின் முடிவை விமர்சிப்பதாகவும் புகார்கள் எழுந்தன. தமிழக பாஜக முன்னாள் தலைவர் என்ற முறையில் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர் அறிவித்ததும் நடந்தது. இந்த சூழலில் நேற்று முன்தினம், ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் தமிழிசையை, உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா எச்சரிக்கை விடுக்கும் தோரணையிலான வீடியோ வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது.

தமிழிசையை பகிரங்கமாக அமித் ஷா மிரட்டியதாக, தமிழகத்தில் அரசியல் புகார் எழுந்தது. தமிழிசை சார்ந்த சமூகத்தினர், ஆதரவாளர்கள் மட்டுமன்றி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், அமித் ஷாவை கண்டித்தனர். அமிஷ் ஷா சந்திப்புடனான விவகாரம் குறித்து அதன் பின்னர் பொதுவெளியில் கருத்தோ, விளக்கமோ தெரிவிப்பதை தவிர்த்து வந்த தமிழிசை சவுந்திரராஜன், நேற்றிரவு தனது எக்ஸ் தள பதிவில் தன்னிலை விளக்கம் தந்தார்.

அதில், “மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் முதன்முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆந்திராவில் சந்தித்துப் பேசினேன். அப்போது தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் நிலவரம் மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் விதம் குறித்து கேட்கவே அவர் என்னை அழைத்தார். அது தொடர்பாக விளக்க முற்படுகையில், நேரமின்மையால் சில அறிவுறுத்தல்களை மட்டுமே வழங்கி அனுப்பி வைத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in