நீட் கவுன்சிங்-க்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்ததோடு, சில மனுக்கள் தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் நீட் கவுன்சிலிங்கிற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது. அதே வேளையில் தாக்கலான சில மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலுவையில் உள்ள மனுக்களுடன் புதிய மனுக்களையும் சேர்த்து, ஜூலை 8 அன்று அடுத்தக்கட்ட விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நீட் கவுன்சிலிங்கை எதிர்த்தும், வினாத்தாள் கசிவு மற்றும் கருணை மதிப்பெண்கள் வழங்கியது தொடர்பான முறைகேடுகள் குறித்தும், சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரிய மனுக்கள் மீதான விசாரணையில், நீட் கவுன்சிலிங்-க்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்விஎன்.பட்டி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, தாக்கலான 11 மனுக்கள் தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஒரு சிறிய அலட்சியம் கூட இல்லாமல் முழுமையாக கையாளப்பட வேண்டும் என்று முன்னதாக கருத்து தெரிவித்த நீதிமன்றம், கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க கடந்த வாரம் மறுப்பு தெரிவித்திருந்தது. நீட் தேர்வு மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் அதன்முடிவுகள் வெளியாகின. நாட்டின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் நீட் தேர்வில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழு மதிப்பெண்களைப் பெற்ற பிறகு, நுழைவுத் தேர்வை நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
சில மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் குறித்தும் கேள்விகள் எழுந்தன. சர்ச்சை அதிகம் மூண்டதில் 1500-க்கும் மேற்பட்டோர் மீண்டும் தேர்வெழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.இதற்கிடையே யுஜிசி-நெட் வினாத்தாள் இணையத்தில் கசிந்ததையடுத்து, தேர்வு முடிவுற்ற அடுத்த நாளே அது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், என்டிஏ சீர்திருத்தங்கள் குறித்தான பரிந்துரைகளுக்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நெட் தேர்வுக்கான அதிரடித் தீர்வு, நீட் விவகாரத்திலும் தேவை என்ற மனுதாரர்களின் எதிர்பார்ப்பு இதனால் பொய்த்துள்ளது.