திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மாயமான 15 வயது சிறுவனின் உடல் 2 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் இன்று மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த லூடஸ் என்பவரது மகன் சாம் ரோஷன் (15). சாம் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று மதியம் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் தடுப்பணை பகுதியில் சக நண்பர்களுடன் சாம் குளிக்க சென்று இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானார்.
உடன் சென்ற மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் நேற்று மதியம் 2 மணியிலிருந்து மாலை 6:30 மணி வரை சிறுவனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோதும், சிறுவனை கண்டறிய முடியவில்லை. இரவு கவிழ்ந்ததால் மீட்புப் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று அதிகாலை 5:30 மணி முதல் மீண்டும் தேடும் பணி தொடங்கியது.
அப்போது ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆக்ஸிஜன் உதவியுடன் ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதைடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் மாணவரின் உறவினர்கள் மற்றும் சக நண்பர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.