கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் விழுந்த கல்லூரி மாணவர்! ஒன்று சேர்ந்து கீழிறங்கி... காப்பாற்றிய சக நண்பர்கள்!
கொடைக்கானல் பகுதியில் 100 அடி ஆழ பள்ளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தவறி விழுந்த நிலையில், மரக்கிளையை பிடித்துக் கொண்டு உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 20 பேர், வேன் ஒன்றில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று இருந்தனர். வட்டக்கானல் வரை சென்ற அவர்கள் பின்னர் 3 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக நடந்து 6,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு பகுதியான டால்பின் நோஸ் பாறையை சென்றடைந்தனர்.
அங்கு இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த போது, மாணவர்களில் ஒருவரான பிரதாப் (19) என்பவர் டால்பின் நோஸ் பாறையின் நுனிப்பகுதியில் நிற்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

பள்ளத்தாக்கில் விழுந்த அவர், அங்கிருந்து மரக்கிளைகளுக்கு இடையே மாட்டிக்கொண்டார். இவரது அபயக்குரலைக் கேட்டு சக மாணவர்கள், உடனடியாக வனத்துறையினர், போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு இது குறித்து தகவல் அளித்தனர்.
இதனிடையே அவர்கள் வருவதற்கு காலதாமதம் ஆகும் என கருதிய மாணவர்கள், தாங்களே சக மாணவனை மீட்க முடிவு செய்தனர். தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பள்ளத்தாக்கில் இறங்கிய மாணவர்கள் சுமார் 100 அடி பள்ளத்தில் மரத்தில் சிக்கியிருந்த பிரதாபை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

பள்ளத்தில் விழுந்ததில் காயம் அடைந்திருந்த பிரதாப்பை, அங்கிருந்து மலை பாதை வழியாக வட்டக்கானலுக்கு கொண்டுவந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ’
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.