டி20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவை திக்குமுக்காட வைத்த நேபாள்!

நேபாள் - தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்
நேபாள் - தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், தென்னாபிரிக்கா அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் நேபாள் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே முக்கிய அணிகளான நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறியுள்ள நிலையில், சூப்பர் ஹிட் சுற்றுக்கு முன்னேறியுள்ள தென்னாபிரிக்க அணி 4வது வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

நேபாள் அணி
நேபாள் அணி

இந்நிலையில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணியில் துவக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்ஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அந்த அணியின் ஸ்டப்ஸ் 27 ரன்களும், மார்க்ரம் 15 ரன்களும் எடுத்தனர். பிற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர். 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது. நேபாள் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய குஷால் 4 விக்கெட்டுகளையும், தீபேந்தரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா அணி
தென்னாப்பிரிக்கா அணி

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாள் அணி அடுத்து களமிறங்கியது. அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர் ஆசிப் ஷேக் பொறுப்புணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் 42 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஷாம்சி பந்தில் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் அணில் ஷா தன் பங்குக்கு 27 ரன்களை சேர்த்து மார்க்ரம் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதனால் கடைசி ஓவரில் நேபாள் அணி வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தது. இறுதிப் பந்தில் குல்சன் ஜா ரன் அவுட் ஆனதால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்கா தரப்பில் சிறப்பாக வந்து வீசிய ஷாம்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த தோல்வியின் மூலம் நேபால் அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in