வெற்றியின் விளிம்பு வரை வந்த தென்னாப்பிரிக்கா: உலகக்கோப்பையை இந்தியா வசமாக்கிய த்ரில் தருணங்கள்!

வெற்றியின் விளிம்பு வரை வந்த தென்னாப்பிரிக்கா: உலகக்கோப்பையை இந்தியா வசமாக்கிய த்ரில் தருணங்கள்!
Updated on
3 min read

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 30 பந்துகளுக்கு 30 ரன்கள் என்ற நிலையில் தென்னாப்பிரிக்கா அணி வலுவாக இருந்தபோது, இந்திய அணியின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்த த்ரில் தருணங்களை பார்ப்போம்

நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். கோலி, ரோகித் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரில் கோலி அதிரடி காட்டினாலும், ரோகித் (9),ரிஷப் பந்த் (0), சூர்யகுமார் (3) என அடுத்தடுத்து ஆட்டமிழக்கவே இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து அக்சர் படேல் கோலியுடன் சேர்ந்தார். அக்ஸர் படேல் 31 பந்துகளில் 47 ரன்களும், கோலி 59 பந்துகளில் 76 ரன்களும் எடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் நோர்க்கியா, கேசவ் மகராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. ஹென்ட்ரிக்ஸ், டீ காக் ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா வீசிய 2வது ஓவரில் ஹென்ட்ரிக்ஸ் க்ளீன் போல்டாகி வெளியேறினார். 3வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங்கிடம் மார்க்ரம் ஆட்டமிழந்தார். ஆனாலும் ஸ்டெப்ஸ், டீகாக் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். அக்சர் படேல் வீசிய 9வது ஓவரில், ஸ்டெப்ஸ் 31 ரன்னில் க்ளீன் போல்டாகினார். அடுத்து கிளாசன் களமிறங்கி, டீ காக்குடன் இணைந்தார். தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் வீசிய 13வது ஓவரில் டீகாக் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து டேவிட் மில்லர் களமிறங்கி, கிளாசனுடன் ஜோடி சேர்ந்தார். குல்தீப் வீசிய 14-வது ஓவரில் மில்லர் ஒருபவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசி ரன்ரேட் பதற்றத்தைத் தணித்தார். அப்போது தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 36 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்ததாக அக்சர் படேல் விளாசிய 15வது ஓவரை கிளாசன் துவைத்து எடுத்தார். முதல் பந்தில் பவுண்டரி அடித்தார், அடுத்த இரு பந்துகளை அக்ஸர் வைடாக வீசினார். 2வது மற்றும் 4வது பந்துகளில் கிளாசன் அபார சிக்ஸர் விளாசினார். 5வது பந்தில் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் மட்டும் கிளாசன் 24 ரன்களை விளாசினார். கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைபட்டது.

அப்போது 16 வது ஓவரை வீசவந்த பும்ரா 4 ரன்கள் மட்டுமே விளாசினார். அந்த நேரத்தில் கீப்பர் ரிஷப் பந்த் வலி காரணமாக மருத்துவரை அழைத்தார். இதனால் ஆட்டம் கொஞ்சம் தாமதமானது. இது தென்னாப்பிரிக்க வீரர்களின் உத்வேகத்தை குறைக்க ரோகித் ஷர்மா வகுத்த வியூகமாக சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் ஹர்திக் பாண்டியா 17-வது ஓவரை வீசினார். முதல் பந்திலேயே கிளாசன் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு பும்ரா 18-வது ஓவரை வீசினார், அந்த ஓவரில் யான்சென் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தென் ஆப்ரிக்காவால் சேர்க்க முடிந்தது. ஆனால் மில்லர் களத்தில் மில்லர் இருந்தது இந்திய அணிக்கு அச்சமூட்டுவதாகவே இருந்தது.

கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா வீசிய முதல் பந்தில் மில்லர் சிக்ஸர் விளாச, எல்லையில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ் பந்தை மிக அற்புதமாக கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அடுத்து ரபாடா களமிறங்கி ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3 பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தில் கேசவ் ஒரு ரன் எடுத்தார். 5-வது பந்தை பாண்டியா வைடாக வீசினார். 2 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் ரபாடா தூக்கி அடித்த ஷாட்டை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தார். கடைசி ஒரு பந்தில் நோர்க்கியா ஒரு ரன் எடுக்கவே தென் ஆப்ரிக்கா 7 ரன்களில் தோல்வி அடைந்தது.

30 பந்துகளுக்கு 30 ரன்கள் என்ற சூழலில் தென்னாப்பிரிக்கா வலுவாக இருந்தபோது பும்ரா வீசிய ஸ்பீடு பிரேக் ஓவர்கள், ஹர்திக் பாண்டியா எடுத்த கிளாசன், மில்லர் விக்கெட்டுகள், அர்ஷ்தீப் சிங்கின் கடைசி 2 ஓவர்கள், சூர்யகுமார் யாதவின் சூப்பர் கேட்ச் ஆகியவையே இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in