மக்களவைத் தேர்தல் முடிவு: 13 மத்திய அமைச்சர்கள் தோல்வி!

ஸ்மிருதி இராணி, ராஜீவ் சந்திரசேகர், அர்ஜுன் முண்டா, அஜய் மிஸ்ரா
ஸ்மிருதி இராணி, ராஜீவ் சந்திரசேகர், அர்ஜுன் முண்டா, அஜய் மிஸ்ரா
Updated on
2 min read

மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இராணி, அர்ஜுன் முண்டா, அஜய் மிஸ்ரா, கைலாஷ் சவுத்ரி உள்ளிட்ட 13 மத்திய அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட 13 மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றவரும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சருமான ஸ்மிருதி இராணி, தற்போதைய தேர்தலில் அதே தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரும், ராகுல் காந்தி குடும்பத்தின் நெருங்கிய நபருமான கிஷோரி லால் சர்மாவிடம் 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஸ்மிருதி இராணி, ராஜீவ் சந்திரசேகர்
ஸ்மிருதி இராணி, ராஜீவ் சந்திரசேகர்

கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியின் சசி தரூரிடம் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

கடந்த 2021 அக்டோபரில் உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்
மக்களவைத் தேர்தல் முடிவுகள்

இந்நிலையில் கெரி தெகுதியில் போட்டியிட்ட அஜய் மிஸ்ரா, சமாஜ்வாதி கட்சியின் உத்கர்ஷ் வர்மாவிடம் 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், மேற்கு வங்கத்தின் பாங்குரா தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் அரூப் சக்ரவர்த்தியிடம் 32,778 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஜார்க்கண்டின் குந்தி மக்களவைத் தொகுதி எம்பி-யும், மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சருமான அர்ஜுன் முண்டா, காங்கிரஸ் வேட்பாளர் கலிச்சரண் முண்டாவிடம் 1,49,675 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

கைலாஷ் சவுத்ரி, எல்.முருகன், நிசித் பிரமானிக்
கைலாஷ் சவுத்ரி, எல்.முருகன், நிசித் பிரமானிக்

இதேபோல், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை இணையமைச்சர் எல். முருகன், மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக், மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யான் உள்பட 13 மத்திய அமைச்சர்கள், இணையமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in