பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த விவகாரம்… 6 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த விவகாரம்… 6 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!
Updated on
1 min read

நெல்லை அருகே மணிமூர்த்தீஸ்வரத்தில் பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடந்த மாதம் 30-ம் தேதி மாலை நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் குளிக்க சென்று திரும்பிய போது, மது அருந்தி கொண்டிருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தாக்கியது.

அத்துடன் அவர்களிடம் இருந்து ஐந்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன்களையும் பறித்துக் கொண்டது. பின்னர் இரண்டு இளைஞர்களையும் நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தேசிய பட்டியல் இனத்தோருக்கான ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

தேசிய பட்டியல் இனத்தோருக்கான ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன், ஆலோசகர் ராமசாமி ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் இரண்டு இளைஞர்களையும் நேரில் சந்தித்து அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கைதாகியுள்ள ஆறு பேரையும் குண்டர் சட்டத்தில் மாநகர காவல் துறை கைது செய்துள்ளது. அதன்படி  நெல்லை தாழையூத்தைச் சேர்ந்த பொன்னுமணி, முத்து என்ற நல்லமுத்து, லெட்சுமணகுமார், ஆயிரம், ராமர், சிவன் என்ற சிவா ஆகியோர் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ச.மகேஸ்வரி உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in