ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை மே 31-ம் தேதிக்குள் கைது செய்ய சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) தீவிரம் காட்டி வருகிறது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியானது. இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவர் ஜெர்மனிக்குப் தப்பியோடினார். இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டு பணிப்பெண், மதச்சார்பற்ற ஜனதா தள முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். இதையடுத்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர்.
இவரது தந்தை எச்.டி.ரேவண்ணாவும் பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதற்கிடையே புகார் அளித்த பெண்ணை கடத்திய வழக்கில் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சில நாள்கள் கழித்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. பிரஜ்வலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கர்நாடகாவில் போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், பிரஜ்வலின் எம்பி பதவிக்காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அப்போது அவரது தூதரக பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா திடீரென நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், "நான் இருக்கும் இடம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இந்த வீடியோவை வெளியிடுகிறேன். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, பல்வேறு காரணங்களுக்காக என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. எனது வெளிநாட்டு பயணத்திற்கும் இந்த நிகழ்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) முன்பு வரும் 31?ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராகப் போகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரஜ்வால் வீடியோ வெளியானது குறித்து உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரஜ்வலின் எம்.பி பதவிக்காலம் வரும் மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அப்போது அவரது தூதரக பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும். இதையெல்லாம் தெரிந்து கொண்டு அவர் வர நினைத்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், பிரஜ்வல் பேசிய வீடியோ ஆதாரம் மற்றும் எந்த ஐ.பி முகவரியில் இருந்து பதிவேற்றப்பட்டது என்பதைக் கண்டறிவதற்கான நடவடிக்கையில் எஸ்ஐடி இறங்கியுள்ளது. வீடியோவை உருவாக்கிய சாதனம், யாரை வீடியோ முதலில் சென்றடைந்தது, எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்ற தகவல்களைக் கண்டறிய எஸ்ஐடி முயற்சித்து வருகிறது.
மே 31-ம் தேதி எஸ்ஐடி முன்பு பிரஜ்வல் ரேவண்ணா ஆஜராகவில்லை என்றால், அவர் வெளியிட்ட வீடியோவை வைத்தே அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் எஸ்ஐடி ஈடுபட வாய்ப்புள்ளது. அத்துடன் அவர் வரும் வரை காத்திருக்க விரும்பாத எஸ்ஐடி அதற்கு முன் அவரைக் கண்டுபிடித்து கைது செய்ய நினைக்கிறது.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா மீதான எஸ்ஐடி விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பலாத்கார புகாரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரஜ்வல் ரேவண்ணா வந்த பிறகு விசாரணை நடத்தப்பட உள்ளது. அத்துடன் ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்ட சாதனம் கண்டுபிடிக்கப்பட உள்ளது.
மேலும், ஆபாச வீடியோக்கள் குறித்த தடயவியல் அறிக்கைக்காக எஸ்ஐடி காத்திருக்கிறது. எஃப்எஸ்எல் அறிக்கை எஸ்ஐடிக்கு கிடைத்தவுடன் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வாக்குமூலத்தை பதிவு செய்து குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மே கடைசியோ, ஜூன் முதல் வாரத்திலோ பிரஜ்வல் ரேவண்ணா வந்தால் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும். அப்படி அவர் வராவிட்டால் குற்றவாளி தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியையும் எஸ்ஐடி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
பிரஜ்வாலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் ப்ளூ கார்னர் நோட்டீஸ் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்டும் உள்ளது. இதனால் ஒரு மாதமாக எஸ்ஐடி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பிரஜ்வல், எஸ்ஐடியிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!
டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்
தாய்லாந்தில் திருமணம்... சென்னையில் ரிசப்ஷன்... நடிகை வரலட்சுமியின் அடடே பிளான்!
மே 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!