சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளுங்கட்சி முன்னிலை... மீண்டும் முதல்வராகும் பிரேம் சிங் தமாங்!

சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங்
சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங்

சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் ஆளும் எஸ்கேஎம் கட்சி 29 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், முதல்வராக பிரேம் சிங் தமாங் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதே சமயத்தில் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதில் 60 தொகுதிகள் கொண்ட அருணாச்சலப் பிரதேசம் மற்றும் 32 தொகுதிகள் கொண்ட சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கு பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கியது.

தபால் வாக்குகள் எண்ணும் பணி
தபால் வாக்குகள் எண்ணும் பணி

சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் தபால் வாக்குகளில் 29 தொகுதிகளில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இரண்டாவது முறையாக பிரேம் சிங் தமாங் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

கடந்த 1994-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி ஆட்சியில் இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு எஸ்கேஎம் கட்சி, பாஜகவுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து எஸ்டிஎஃப் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்களில் 10 பேர் பாஜகவுக்கும், இரண்டு பேர் எஸ்கேஎம் கட்சிக்கும் அணி மாறினர்.

இதனால் எஸ்டிஎஃப் கட்சியின் ஒரே எம்எல்ஏவாக அதன் தலைவரும் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவருமான பவன் குமார் கம்லிங் மாறியிருந்தார். இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பாக கருத்து வேறுபாடால் எஸ்கேஎம் மற்றும் பாஜக உடனான கூட்டணி முறிந்ததை அடுத்து, இரு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in