ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா தம்பதிக்கு எதிராக மேலும் ஒரு மோசடி வழக்கு... மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா
ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் இணைந்து மலிவு விலையில் தங்கம் என்ற பெயரில் மோசடி செய்தாக எழுந்த புகாரில், காவல்துறைக்கு மும்பை நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தென்னிந்திய சினிமாக்களில் நடித்ததன் மூலம் தமிழர்களுக்கும் பரிச்சயமானவர். 49 வயதாகும் இவர் தேகத்தை கட்டுக்கோப்பாக வைப்பது தொடர்பாக, கட்டண அடிப்படையில் செயலி வழி சேவை புரிந்து வருகிறார். அவரது கணவரும் கோடீஸ்வரருமான ராஜ் குந்த்ரா, ஆபாச படங்கள் எடுத்து அவற்றை பிரத்யேக செயலி மூலம் கடை பரப்பிய குற்றச்சாட்டில் அண்மையில் கைதானார்.

ராஜ்குந்த்ரா - ஷில்பா ஷெட்டி
ராஜ்குந்த்ரா - ஷில்பா ஷெட்டி

இந்த சர்ச்சை ஜோடி தற்போது புதிய மோசடி குற்றச்சாட்டின் கீழ் தற்போது ஊடக கவனம் பெற்றுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் ’சத்யுக் கோல்ட்’ என்ற கவர்ச்சிகர தங்கத் திட்டங்களுடனான ஒரு நிறுவனத்தை ஷில்பா - ராஜ் தம்பதியர் தொடங்கினர். இதன் மூலம் ஏறி இறங்கும் தங்கத்தின் விலை குறித்து கவலைப்படாது சொக்கத் தங்கத்தை பெறலாம் என உறுதியளித்தார்கள். இதன் மூலம் மலிவு விலையில் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் பணம் போட்டார்கள்.

இந்த வாக்குறுதியை நம்பி தங்க வர்த்தகரான கோத்தாரி என்பவர் ரூ90 லட்சம் முதலீடு செய்தார். முதலீட்டு காலத்தில் கூடுதல் லாபத்துடன் தங்கக்கட்டிகள் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை நம்பி கோத்தாரி காத்திருந்தார். ஆனால் முதிர்வு நாளான 2019, ஏப்ரல் 2 தினத்தை கடந்த பின்னரும் ஷில்பா - ராஜ் தம்பதி தாங்கள் வாக்குறுதி அளித்தபடி தங்கம் வழங்காது இழுத்தடித்தனர். தங்கம் தராது போனாலும் பரவாயில்லை, கட்டிய தொகையை திருப்பித் தாருங்கள் என கோத்தாரி கேட்டபோதும் ஷில்பா தரப்பிலிருந்து பதிலில்லை.

இதனையடுத்து, காவல்துறையிடம் கோத்தாரி புகாரளித்தார். தன் வசமிருந்த ஆவணங்களையும் சமர்ப்பித்தார். ஆனால் காவல்துறையினர் அந்த புகார் குறித்து முறையான விசாரணை நடத்தவில்லை என கோத்தாரி அதிருப்தி அடைந்தார். எனவே தனது புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணை மேற்கொள்ள போலீஸாருக்கு உத்தரவிடுமாறு அவர் மும்பை நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், கோத்தாரியின் புகாரை உரிய முறையில் விசாரித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

முன்னதாக, ஆண்டின் தொடக்கத்தில், எம்எல்எம் திட்டத்துடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ராஜ் குந்த்ரா அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணையில் சிக்கினார். ஷில்பா ஷெட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மும்பை பிளாட் உட்பட ரூ97 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி விசாரணையை தொடர்ந்து வருகிறது. இதுமட்டுமன்றி ராஜ் குந்த்ராக்கு எதிராக கிளம்பியிருக்கும் பல இளம் பெண்கள், சினிமா ஆசைக்காட்டி பாலியல் வீடியோக்களில் நடிக்க வைத்து தங்கள் எதிர்காலத்தை சிதைத்துவிட்டதாக புகார்களை தொடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது, தங்க உத்தரவாதத் திட்ட மோசடியும் சேர்ந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in