செங்கோலை நாடாளுமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும்: சமாஜ்வாதி கட்சி எம்பி- திடீர் போர்க்கொடி!

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோல்
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோல்
Updated on
1 min read

சமாஜ்வாதி எம்பி- ஆர்.கே.சவுத்ரி, செங்கோல் குறித்து கூறியுள்ள கருத்து அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் செங்கோல் இருப்பது முடியாட்சியின் அடையாளம் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது, தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலை, சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பிரதமர் மோடி நிறுவினார்.

இந்நிலையில், சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் இருப்பது மன்னராட்சியின் அடையாளம் என்றும், ஜனநாயகத்தை காக்க அதனை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அரசியல் சாசனம் புத்தகத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்பி- ஆர்.கே.சவுத்ரி கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சி எம்பி- ஆர்.கே.சவுத்ரி
சமாஜ்வாதி கட்சி எம்பி- ஆர்.கே.சவுத்ரி

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அரசியலமைப்பு சாசனம் என்பது ஜனநாயகத்தின் சின்னம். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியது. 'செங்கோல்' என்றால் 'ராஜ்-தண்ட்' அல்லது 'ராஜா கா தண்டா'. சமஸ்தானத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, நாடு சுதந்திரம் பெற்றது. 'ராஜா கா தண்டா' அல்லது அரசியலமைப்பு சாசனம் இவற்றில் எதனால் நாடு வழிநடத்தப்படும்? அரசியலமைப்பு சாசனத்தை காப்பாற்ற நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும்.” என்றார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி- மாணிக்கம் தாகூர் கூறுகையில், “நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது, அரசு ஒரு நாடகத்தை நடத்தியுள்ளது. சமாஜ்வாதி கட்சியிடமிருந்து வந்துள்ள இது ஒரு நல்ல ஆலோசனை" என்றார்.

இதற்கிடையே பாஜகவை சேர்ந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், எக்ஸ் வலைதளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை.

'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDI கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தில் செங்கோல் விவகாரம் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்குமிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in