வாக்கு எண்ணும் போது எச்சரிக்கையுடன் இருங்கள்... காங்கிரஸாரை அலர்ட் செய்த செல்வப்பெருந்தகை!

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது காங்கிரஸ் தொண்டர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏழாம் கட்டமாக பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 13, மேற்குவங்கத்தில் 9, பீகாரில் 8, ஒடிசாவில் 6, இமாச்சலப்பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3 தொகுதிகள் என மொத்தம் 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

இந்த நிலையில் சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "தேர்தல் ஆணையம் தபால் வாக்குகளை முதலிலேயே எண்ண வேண்டும். அதனை கடைசியாக எண்ணக் கூடாது. தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகள் வெளியிடும் போது கும்பகர்ணனைப் போல தூங்கக்கூடாது.

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி யாருடைய நலனுக்காக தியானம் செய்கிறார்? 14 கேமராக்களுடன் தியானம் செய்வது ஏன்?. மோடியின் தொகுதியான வாரணாசியில் இன்று தேர்தல் நடக்கும் நேரத்தில், கன்னியாகுமரியில் அவர் தியானத்தின் மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யும் பிரதமர் மோடி
விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யும் பிரதமர் மோடி

ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. எனவே, தேர்தல் முகவர்கள் வாக்கு எண்ணும்போது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அத்துடன் இத்தனை நாள் உழைத்ததை விட வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4 அன்று கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தல் அலுவலர்கள் அறிவிக்கும் வாக்கு சதவீதமும், வாக்குப் பெட்டியில் உள்ள வாக்குகளின் சதவீதமும் சரியானதாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in