கஞ்சா போதையில் சிறுவர்கள் வெறிச்செயல்... விசாரிக்கச் சென்ற போலீஸுக்கு அரிவாள் வெட்டு!

படுகாயமடைந்த காவலர் அப்துல் காதர்
படுகாயமடைந்த காவலர் அப்துல் காதர்

திருச்சியில் கஞ்சா போதையில் செல்போன் திருடி விட்டுச் சென்ற சிறுவர்களிடம் விசாரணை நடத்தச் சென்ற போலீஸ்காரர், அரிவாளால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அதிக அளவில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதையடுத்து திருச்சி மாநகரம் முழுவதும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டிருந்தார். இதன் பெயரில், திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பீமநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்ற காவலர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

திருச்சி காவிரி பாலம்
திருச்சி காவிரி பாலம்

சிந்தாமணி பகுதியில் அவர் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் தன்னிடமிருந்து சிறுவர்கள் சிலர் செல்போனை பறித்துக் கொண்டு ஓடியதாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் காவிரி பாலம் அருகே அப்துல் காதர் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சில சிறுவர்கள் இருப்பதைக் கண்டதும், அவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது இரண்டு சிறுவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அப்துல் காதரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

படுகாயமடைந்த காவலர் அப்துல்காதருக்கு தீவிர சிகிச்சை
படுகாயமடைந்த காவலர் அப்துல்காதருக்கு தீவிர சிகிச்சை

ரத்தம் வழிய படுகாயமடைந்த காவலர் அப்துல் காதர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அண்ணாசாலைப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், மருத்துவமனையின் வாசலிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனையில் ஊழியர்கள் உடனடியாக அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர உடல் நிலை தேறி வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காவலரை வெட்டிவிட்டு தப்பியோடிய சிறுவர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்காக போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற போது சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுவது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in