
இன்று அகமதாபாத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை சென்னையில் பொது இடங்களில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று களம் காண்கின்றன. பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்கள், இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள், ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வர உள்ளனர்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 19 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனவும், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதே மைதானத்தில் தான் இந்திய அணி,பாகிஸ்தானை 191 ரன்களுக்குள் சுருட்டியது. அதே வெற்றியை இந்தியா இறுதிப் போட்டியிலும் தொடர வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று இறுதிப் போட்டியை உற்று நோக்க உள்ளனர்.
நேரில் போட்டியை காண்பது ஒருவித அனுபவம் என்றால், கூட்டமாக மக்களுடன் திரையில் காண்பது மற்றொரு சிறந்த அனுபவம். அதனால், சென்னையில் கிரிக்கெட் போட்டியை மக்கள் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் கிரிக்கெட்டை திரையிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதனால் பொதுமக்கள் கடற்கரையில் ரம்மியமான சூழலில் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசிக்கலாம்.