கனமழை எதிரொலி… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை எதிரொலி… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
Updated on
1 min read

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி மாறக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல்  கனமழை பெய்து வருகிறது. அதே போல் விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. எனவே, இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனமழை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கடலூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in