அதிமுகவுக்கு அவைத் தலைவர் சசிகலா?

வி.கே. சசிகலா
வி.கே. சசிகலா

“சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் இந்த மூவருக்கும் மன்னிப்பே கிடையாது” என அதிமுக முக்கிய தலைகள் சிலர் முழங்கி வரும் நிலையில், சசிகலாவை எப்படியும் அதிமுகவுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் இன்னமும் தீர்மானமாய் இருக்கிறதாம் பாஜக. இதற்கேற்ப சசிகலாவும் மத்திய அரசை அதிகம் விமர்சிக்காமல் மாநில அரசை மட்டும் போட்டுத் தாக்கி வருகிறார். இன்னொரு பக்கம், “அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியை நான் தொடர்ந்து செய்துவருகிறேன்” என்றும் அடிக்கடி அவர் சொல்லி வருகிறார்.

டாக்டர் கிருஷ்ண சாமி, ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ் என குட்டிக் குட்டி சாதி கட்சி தலைவர்களை எல்லாம் தங்களது கூட்டணிக்குள் இழுத்து உட்காரவைத்திருக்கும் பாஜக, தென் மாவட்டங்களில் பிரதான ஓட்டு வங்கியாக இருக்கும் முக்குலத்தோரையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் விதமாகவே சசிகலாவை அதிமுகவுக்குள் கொண்டு வர மெனக்கிடுகிறதாம்.

ஒருவேளை, மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தை தனது இரண்டாவது சாய்ஸாக மோடி எடுத்தால், ஓபிஎஸ், தினகரன், சசிகலா - இந்த மூவரையும் ஒதுக்கிவைத்துவிட்டு ராமநாதபுரத்தில் அத்தனை எளிதாக அவரால் கரைசேர முடியாது. இதையெல்லாம் கணக்குப் போட்டே சசிகலாவை உள்ளே இழுக்கிறதாம் பாஜக.

சசிகலா வருகைக்கு அதிமுகவுக்குள் ஒரு தரப்பினர் ரெட் சிக்னல் போட்டாலும் இன்னொரு தரப்பினர் க்ரீன் சிக்னல் கொடுக்கிறார்களாம். அவர்கள் மூலமாக சசிகலாவை அதிமுகவுக்குள் கொண்டுவர முயற்சிக்கும் பாஜக, “சசிகலாவை அதிமுகவுக்குள் அழைத்து அவருக்கு அவைத் தலைவர் பதவியைக் கொடுத்துவிடுங்கள். அதைத் தொட்டு அவரால் கட்சிக்குள் யாருக்கும் எந்தத் தலைவலியும் இருக்காதூ” என்றும் யோசனை சொல்லி இருக்கிறதாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in