குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அகமதாபாத்தில் விண்கலம் விழுந்தது போல சாலையில் மிகப்பெரிய பள்ளம் உருவானதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தியா முழுவதும் பருவமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. சௌராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்றும், ஜூலை 2 முதல் 4-ம் தேதி வரை குஜராத் முழுவதும் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே தேதிகளில் மத்திய மகாராஷ்டிராவின் காட் பகுதிகள், கொங்கன், கோவாவிலும், ஜூலை 2 மற்றும் 3 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளம், மாஹே, கர்நாடகாவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குஜராத் மாநிலம், அகமதாபாத் ஸ்மார்ட் சிட்டியின் ஷேலாவில் கனமழையின் போது சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. விண்கல் விழுந்த பள்ளம் போன்ற ஒரு பெரிய பள்ளம் சாலையில் ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த பள்ளத்திற்குள் மழைநீர் நிரம்பி வருவதால் அதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், பதிக் ஆசிரமம் அருகே உள்ள பாதாளச் சாக்கடையில் தேங்கிய மழைநீர் பவுசர் மூலம் வெளியேற்றப்பட்டது. கனமழையால் அகமதாபாத் நகரில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இது தொடர்பாக ஐஎம்டி விஞ்ஞானி பிரதீப் சர்மா கூறுகையில், “அடுத்த 5 நாட்களில் குஜராத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யும். சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் இன்று மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருச், சூரத், நவ்சாரி, வல்சாத் மற்றும் தாத்ரா நகர் ஹவேலிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.