ரிஷி சுனக் அதிர்ச்சி தோல்வி; பிரிட்டனின் புதிய பிரதமராகிறார் கெய்ர் ஸ்டார்மர்!

தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர்
தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர்

பிரிட்டனில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி, கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

பிரிட்டன் பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 4.6 கோடி பேர் வாக்களித்த இத்தேர்தலுக்காக 40 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தேர்தல் வாக்குச் சீட்டு முறையில் நடத்தப்பட்டது.

இத்தேர்தலில் ஆளும் கட்சியான, பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிவடைந்ததுமே வாக்கு எண்ணிக்கை துவங்கியது. பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் மொத்தம் உள்ள 650 இடங்களில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னர் நடத்தப்பட்ட முதல் பொதுத்தேர்தல் இதுவாகும். இந்நிலையில், பிரிட்டன் உள்ளூர் நேரப்படி, அதிகாலை 5.24 மணி நிலவரப்படி தொழிலாளர் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைக் கடந்து 360 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அக்கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி - 81 தொகுதிகளிலும், ஸ்காட்டிஷ் தேசியவாத கட்சி (எஸ்என்பி) - 3 தொகுதிகளிலும், லிபரல் டெமாக்கிரட்ஸ் - 49 தொகுதிகளிலும், சீர்திருத்த யு.கே. கட்சி - 3 தொகுதிகளிலும், மற்றவை - 1 என்ற அளவில் வெற்றி முடிவுகள் வரப்பெற்றுள்ளன.

கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரும் பிரதமருமான ரிஷி ஷுனக்
கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரும் பிரதமருமான ரிஷி ஷுனக்

இந்நிலையில், ஆட்சியை கைப்பற்றிய வெற்றி மகிழ்ச்சியில் கெய்ர் ஸ்டார்மர் உரையாற்றுகையில் "நாம் அதை செய்தோம்... மாற்றம் இப்போது தொடங்குகிறது" என குறிப்பிட்டார்.

இதேபோல், பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், “கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சிக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in