ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக  விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள், நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 4ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற 23 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றவர்களிடம் ஆட்சியர் அளித்த உத்தரவாதத்தின் பேரில் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8ம் தேதி பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கச்சென்று கைது செய்யப்பட்ட  19 மீனவர்களில் ஒருவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஒரே வாரத்தில் 4வது மீனவருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும்,  பல லட்சம் மதிப்புள்ள 3 படகுகள்  அரசுடைமையாக்கப்பட்டுள்ளதும் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்திய மீனவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று மாலை அனைத்து விசைப்படகு மீனவர்களின் ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் ஜேசு தலைமையில் நடந்தது. கூட்டத்தின் முடிவில், இலங்கை அரசு விதித்துள்ள புதிய கடும்தண்டனை சட்டத்தை நிறுத்த வேண்டும். சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட விசைப் படகுகளை மத்திய அரசு மீட்டுத் தரவேண்டும் என்று வலியுறுத்தி  நாளை (பிப்.24) தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவர் சங்கங்கள் சார்பிலும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in