மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளும் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்க, எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என ராகுல் காந்தி நிபந்தனை விதித்துள்ளார்.
18வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் கூட்டத்தொடர் என்பதால் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தேர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 8 முறை எம்பி-யாக உள்ள கொடுக்குன்னில் சுரேஷ்க்கு பதிலாக, பர்த்ருஹரியை தேர்வு செய்தது தவறு என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்றுடன் சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ளதால், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீண்டும் ஓம் பிர்லாவை சபாநாயகராக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தங்களுக்கு துணை சபாநாயகர் பதவி ஒதுக்க வேண்டுமென பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சபாநாயகரை தேர்வு செய்வது தொடர்பாக மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் எதிர்க்கட்சியினர் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்பி-யான ராகுல் காந்தி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ”என்டிஏ கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்க தயார் என ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தேன். ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.
எதிர்க்கட்சிகளை மதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். ஆனால் எங்கள் கட்சியின் தலைவர் கார்கேவை அவர் அவமதிக்கிறார். கோரிக்கை தொடர்பான முடிவை தெரிவிப்பதாக கார்கேவிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அது தொடர்பாக எவ்வித தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை” என்றார்.