15 நாளில் 10 பிரச்சினைகள்: பட்டியல் போட்டு பாஜக அரசை விமர்சித்த ராகுல் காந்தி!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Updated on
2 min read

ரயில் விபத்து, நீட் விவகாரம் உள்ளிட்ட 10 பிரச்சினைகளை பட்டியலிட்டுள்ள ராகுல் காந்தி, மத்திய அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கி வருகிற ஜூலை 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று கூட்டத்தொடர் துவங்கிய போது தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு, உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நாளையும் இந்நிகழ்வுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாபை நியமித்ததற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதேபோல் பல்வேறு விவகாரங்களை இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரயில் விபத்துகள், நீட் தேர்வு விவகாரம் உட்பட 15 நாட்களில் 10 பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மத்திய அரசுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரங்களை சமாளிக்க முடியாத பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மோடி - ராகுல்
மோடி - ராகுல்

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் 15 நாட்கள்! 1. பயங்கர ரயில் விபத்து 2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் 3. ரயில்களில் பயணிக்கும் அவல நிலை 4. நீட் ஊழல் 5. நீட் முதுகலை ரத்து 6. யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு 7. பால், பருப்பு வகைகள், எரிவாயு மற்றும் பல பொருட்கள் விலை உயர்வு 8. தீயில் எரியும் காடுகள் 9. தண்ணீர் நெருக்கடி 10. வெப்ப அலையின் போது முன்னேற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் இறப்புகள். உளவியல் ரீதியாக பின்னடைவை சந்தித்து வரும் நரேந்திர மோடி, தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார்.

நரேந்திர மோடி மற்றும் அவரது அரசின், அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் பலமான எதிர்க்கட்சி தனது அழுத்தத்தைத் தொடரும். மக்களின் குரலை உயர்த்தும், பொறுப்பேற்காமல் பிரதமர் தப்பிக்க அனுமதிக்க மாட்டோம்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in