அக்னி வீரர்களுக்கு நீதி கிடைக்குமா? -குடியரசுத்தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

ராணுவ சேவையில் வீர மரணம் அடைந்த அக்னி வீரர்களுக்கு நியாயம் மற்றும் நீதி வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று எழுதியுள்ள கடிதத்தில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகவும், ராணுவ சேவையில் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நன்மைகளின் தன்மை மற்றும் அளவுகளில் பாகுபாடு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எல்லை பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்
எல்லை பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்

அக்னிபாத் விவகாரம் என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விஷயம் என்றாலும், குடியரசுத் தலைவர் என்பவர் முப்படைகளின் உச்ச தளபதி என்பதால் விதிவிலக்குகளை ராகுல் கோரியுள்ளார். அக்னிபாத் விவகாரம், தேசிய பாதுகாப்பை பாதிக்கக் கூடியது என்றும் அந்த கடிதத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடியரசுத் தலைவருக்கு எழுதிய இரண்டு பக்கக் கடிதத்தில், தேசத்துக்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்யும் அக்னிவீரர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். "அக்னிபாத் திட்டத்தில் குறைந்த ஊதியம், சலுகைகள் மற்றும் வாய்ப்புகளுடன் இதேபோன்ற பணிகளில் பணியாற்ற எதிர்பார்க்கும் குறைந்த வீரர்களை உருவாக்குதலை அடிப்படையாக கொண்டது" எனவும் அந்த கடித்தத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். .

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்த ஜனவரி மாதம் நடந்த கண்ணிவெடி வெடிப்பில் உச்ச தியாகம் செய்த பஞ்சாபில் உள்ள ராம்கர் சர்தாரன் கிராமத்தின் அக்னிவீரரான அஜய் குமார் (23) குடும்பத்தினரை அண்மையில் தான் சந்தித்ததையும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அஜயின் வீரமரணத்தால் அவரது குடும்பத்தினர் உடைந்து போயிருப்பதாகவும், வறுமையில் வாடியதைக் கண்டு தான் மனம் உடைந்ததாகவும் ராகுல் தெரிவித்தார். "தங்கள் மகனை இழந்த போதிலும், தேசத்திற்கான சேவையில் அவரது தியாகம் குறித்து அஜய் குடும்பத்தினர் பெருமிதம் கொண்டுள்ளனர். இருப்பினும், அவரது மரணத்திற்குப் பிறகு அரசாங்கம் வெளிப்படுத்திய அதிர்ச்சியூட்டும் அக்கறையின்மை மற்றும் உணர்ச்சியற்ற தன்மை ஆகியவை அஜய் குடும்பத்தினரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளன” எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

"வழக்கமான ராணுவ வீரர்களின் குடும்பங்கள் பெறும் வாழ்நாள் நலன்கள் அல்லது சமூகப் பாதுகாப்பு எதுவும் அஜய்யின் குடும்பம் பெறவில்லை. இதன் பொருள் அவர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ வசதிகள், கல்விக்கான உதவி அல்லது வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்காது" என்று அவர் கூறினார்.

அஜய் தனது நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவு, கடின உழைப்பு மற்றும் மிக உயர்ந்த தியாகம் செய்தாலும், அவர் ஒரு அக்னி வீரர் என்பதால் மட்டுமே அவரது குடும்பத்திற்கு மற்ற வீரர்களுக்கு கிடைக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

"அஜய்யின் குடும்பம் எதிர்கொள்ளும் சோகமான சூழ்நிலை இன்று ஆயிரக்கணக்கான அக்னிவீரர்கள் எதிர்கொள்ளும் அதே அநீதியாகும். மேலும் எதிர்காலத்தில் இன்னும் லட்சக்கணக்கானவர்கள் சந்திக்க நேரிடும். வழக்கமான வீரர்களுடன் ஒப்பிடும்போது, ​​கொல்லப்பட்ட அக்னிவீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நன்மைகளின் தன்மை மற்றும் அளவுகளில் உள்ள பாகுபாடு உங்கள் அவசர கவனத்தை கோருகிறது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எனவே அக்னி வீரர்கள் பிரச்சினையில் தலையிடுமாறு குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். ”தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் களமான கொள்கை விஷயங்களில் குடியரசுத்தலைவர் பொதுவாக தலையிடுவதில்லை என்பதை நான் அங்கீகரிக்கிறேன். இருப்பினும், இந்தச் சிக்கலின் தீவிரத்தன்மை மற்றும் உங்களின் தனித்துவமான நிலை ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, இந்த வழக்கில் விதிவிலக்கு தேவை.

நீங்கள் இந்தியாவின் ஆயுதப் படைகளின் உச்ச தளபதி. இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக உங்களை அர்ப்பணிப்பதாக உறுதிமொழி எடுத்துள்ளீர்கள். அக்னிவீரர் தியாகிகளுக்கு எதிரான இந்த பாகுபாடு நமது தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தில்லையா? தைரியமாக தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் நமது இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய அநீதி இல்லையா?" என்றும் ராகுல் காந்தி தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in