உஷார்... உங்க வங்கி கணக்குல பணம் போச்சா?! வாடிக்கையாளர்களிடம் ரூ.35,000 கோடி வசூலித்த வங்கிகள்!

உஷார்... உங்க வங்கி கணக்குல பணம் போச்சா?! வாடிக்கையாளர்களிடம் ரூ.35,000 கோடி வசூலித்த வங்கிகள்!

சர்வீஸ் சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டணங்களை தனியார் வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் 35 ஆயிரம் கோடி ரூபாயை வாடிக்கையாளர்களிடம் வசூலித்து உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வங்கியிலும் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் வங்கி கணக்கிற்கேற்ப மினிமம் பேலன்ஸாக இவ்வளவு ரூபாய் வைத்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளது. அதற்கு கீழ் இருந்தால், இருக்கும் பணத்தில் இருந்தே அபராதத்தை எடுத்து விடுவார்கள். உதாரணத்திற்கு உங்கள் சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் 1000 ரூபாய் என்று வைத்து கொள்வோம். அதற்கு அர்த்தம் என்ன என்றால், தினமும், அந்த நாள் முடியும் சமயம், உங்கள் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் வைத்திருக்க இருக்க வேண்டும்.

இப்படி அந்த மாதம் முழுவதும், தினமும் ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும். மொத்தமாக கணக்கிட்டால், 30 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் தினமும் ஆயிரம் ரூபாய் வீதம் அந்த மாதத்தில் 30 ஆயிரம் ரூபாய் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மினிமம் பேலன்ஸ் மெய்ன்டன் செய்யவில்லை என்று கட்டணம் வசூலிப்பார்கள். இப்படி தான் மினிமம் பேலண்ஸ் கணக்கிடப்படுகிறது.

இந்நிலையில், சர்வீஸ் சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டணங்களைத் தனியார் வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் 35 ஆயிரம் கோடி ரூபாயை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.

வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச பணம் தனது சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்பது வங்கிகளின் விதிமுறை. மினிமம் கட்டணத்தை வைக்காதவர்கள் அதற்கான கட்டணத்தை வங்கிகள் வசூலித்து வருகின்றன. அதேபோல ஏடிஎம்களில் 5 முறை பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதற்கு மேல் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாலோ அல்லது வேறு வங்கிகளில் பணம் பரிவர்த்தனை செய்தாலோ கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. அதே போல் எஸ்எம்எஸ் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது வங்கிகள்.

குறிப்பாக 2018ம் ஆண்டு முதல் பொதுத்துறை வங்கிகள் மற்றும் முன்னணியில் உள்ள தனியார் துறை வங்கிகளான ஆக்ஸிஸ், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ இன்டஸ்ட்ரியல், ஐடிபிஐ ஆகிய வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் தொகை விவரங்களை மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்திருக்கிறார். அதன்படி வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காமல் உள்ள வாடிக்கையாளர்களிடம் 5 ஆண்டுகளில் 21,44 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. அதேபோல நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட ஏடிஎம்களில் கூடுதலாக பணம் எடுத்ததற்கான கட்டணமாக 8,289 கோடி ரூபாயும், குறுஞ்செய்தி அனுப்பும் சேவைக்காக 6,254 கோடியும் வங்கிகள் வசூல் செய்துள்ளன.

வங்கிகளில் மறைமுகமாக வசூலிக்கும் தொகையை கண்காணிக்க நேரம் கூட இல்லாமல் வாழ்வாதாரத்திற்காக பலரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்படி அநியாயத்துக்கு வசூலிக்கப்படும் சிறு சிறு தொகையையும் நீண்ட நாட்களுக்கு கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு தனிநபரும் தேவையில்லாமல் பெரிய தொகையை கட்டணமாக செலுத்தி இருப்போம். எனவே ஒவ்வொரு தனி நபரும் வங்கிகளின் விதிமுறையை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் நமது சேமிப்பை இழக்காமல் இருக்கலாம். அதேபோல டிஜிட்டலை ஊக்குவிக்கும் அரசுகளும் தேவையில்லாமல் வங்கிகள் கட்டணத்தை வசூலிப்பதை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in