பிரசாந்த் கிஷோர் லேட்டஸ்ட் கணிப்பு... வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை முந்திய அறிவிப்பு

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, பிரசாந்த் கிஷோர் தனது பிரத்யேக கணிப்பினை தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவதற்கு சற்று முன்னதாக, தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், இந்த தேர்தலில் பாஜக வெற்றி வாய்ப்பு குறித்தான தனது கணிப்பை மீண்டும் பதிவு செய்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான இன்றைய 7-ம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்ததில், கருத்துக் கணிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, தேசிய மற்றும் பிராந்திய செய்தி சேனல்கள் மாலை 6 மணிக்கு மேல் தங்களது பிரத்யேக கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட உள்ளன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்ற 303 இடங்களில் சற்றேக்குறைய அல்லது அதை விட சற்று அதிகமான எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். ”எனது மதிப்பீட்டின்படி, பாஜக கடந்த முறை வென்ற இடங்கள் அல்லது அதனைவிட சற்று சிறப்பான எண்ணிக்கையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில், வெற்றிபெறும் இடங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. அதே போன்று இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கில் பாஜகவுக்கு உதவ பிராந்தியக் கட்சிகள் காத்திருக்கின்றன” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரசாந்த் கிஷோர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “பாஜக அரசுக்கு எதிராக அதிருப்தி, ஆதங்கம் என ஆங்காங்கே ஓரிரு சலசலப்புகள் தென்பட்டாலும், தேசிய அளவில் பரந்துபட்ட எதிர்ப்பு தென்படவில்லை. எனவே கடந்த மக்களவைத் தேர்தலின் வேற்றிக்கு நெருக்கமாகவோ அல்லது 303 என்ற அந்த வெற்றி எண்ணிக்கையை விட சற்று அதிகமாகவோ பாஜகவின் இம்முறை வெற்றி அமையும்” என்று தெரிவித்திருந்தார். ”அடிப்படைகளை நாம் பார்த்தோம் என்றால் தற்போதைய அரசாங்கம் மற்றும் அதன் பிரதமர் மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி அல்லது கோபம் இருப்பதாக கேள்விப்படவில்லை. எனவே கடந்த தேர்தல் முடிவுகளை ஒட்டியோ நடப்பு வெற்றியும் இருக்கும்” எனவும் பிரசாந்த் கிஷோர் கணித்திருந்தார்.

பாஜக
பாஜக

ஏப்ரல் 19 அன்று முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கிய நடப்பு மக்களவைத் தேர்தலின் இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் இணைந்து நடைபெறுகின்றன. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில், இன்று மாலை முதல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக இருக்கின்றன. அவற்றின் வருகையை முரசறைந்து தெரிவிப்பது போன்று, சில மணி நேரங்கள் முன்னதாக பிரசாந்த் கிஷோரின் கணிப்பு வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in