ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது... பாலியல் வன்கொடுமை வீடியோ வழக்கின் அடுத்தக்கட்டம் என்ன?

நாடாளுமன்ற வளாகத்தில் பிரஜ்வல் ரேவண்ணா
நாடாளுமன்ற வளாகத்தில் பிரஜ்வல் ரேவண்ணா
Updated on
2 min read

பாலியல் வன்கொடுமை மற்றும் வீடியோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, ஜெர்மனியில் இருந்து பெங்களூரு திரும்பியதில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததாக குற்றசாட்டுக்கு ஆளானார். அவருக்கு எதிரான புகார்கள் வெடித்ததில் ஜெர்மனிக்கு தப்பியோடினார். அதன் பின்னர் சுமார் 1 மாத இடைவெளியில் பெங்களூரு திரும்பியவரை, இன்று அதிகாலை பெங்களூரு காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விமான நிலையத்தில் மடக்கி கைது செய்தனர். பெங்களூரு சிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாசன் தொகுதி எம்.பி-யும், நடப்பு தேர்தலின் ஜனநாயக கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த கையோடு தனது ராஜாங்க பாஸ்போர்ட் மூலம் ஜெர்மனிக்கு பறந்தார். அவருக்கு எதிரான பாலியன் வன்கொடுமை வழக்கு இங்கே பெரிதாக வெடித்ததில், அரசியல் மற்றும் சட்ட நெருக்கடிகள் அதிகரித்தன. தாத்தாவும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடா, சித்தப்பாவும் மாநில முன்னாள் முதல்வருமான குமாரசாமி ஆகியோர், பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்ப வலியுறுத்தினர்.

விமான நிலையத்தில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா
விமான நிலையத்தில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா

பலமுறை ஜெர்மனியின் முனிச்சிலிருந்து இந்தியா திரும்ப விமான டிக்கெட் முன்பதிவு செய்த பிரஜ்வல் ரேவண்ணா, கடைசி நேரத்தில் அவற்றை ரத்து செய்திருக்கிறார். இதனிடையே கர்நாடகத்தில் அவருக்கு எதிரான அரசியல் நெருக்கடி முற்றவே, அவர் நாடு திரும்புவது கட்டாயமானது. பெங்களூரு போலீஸாரின் லுக் அவுட் நோட்டீஸ், இன்டர்போல் வாயிலான புளூ கார்னர் நோட்டீஸ் ஆகியவை, பிரஜ்வலின் ஜெர்மனி இருப்புக்கு எதிராக மாறின. இதனையடுத்து அங்கிருந்தபடி வீடியோ அறிக்கை வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா பலதரப்பினரிடம் மன்னிப்பு கோரியதோடு, மே 31 அன்று பெங்களூரு திரும்பி காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்திருந்தார்.

முன்னதாக பெங்களூர் விமான நிலையத்தில் குழுமிய எஸ்ஐடி, பிரஜ்வல் ரேவண்ணா வந்திறங்கியதுமே அவரை கைது செய்து மாற்று வழியில் வெளியேறினர். பிரஜ்வல் வசமிருந்த 2 சூட்கேஸ்களை எஸ்ஐடி போலீஸார் பறிமுதல் செய்தனர். தனது வீட்டின் பணிப்பெண்கள் முதல் கட்சியின் பெண் நிர்வாகிகள் மற்றும் பெண் அரசு ஊழியர்கள் வரை பல தரப்பினரை மிரட்டியும், அதிகார பலத்தை பயன்படுத்தியும் பாலியல் வன்முறைக்கு பிரஜ்வல் ரேவண்ணா ஆளாக்கி வந்துள்ளார். வீடியோ அழைப்புகள் வாயிலாகவும் பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அவை தொடர்பான, சில விநாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை நீடிக்கும் சுமார் 3000வீடியோக்களை பென் டிரைவில் சேமித்து வைத்திருந்தார்.

அவை வெளியே கசிந்ததில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு விவகாரம் பெரிதாக வெடித்தது. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான சட்டபூர்வமான நடவடிக்கை மட்டுமன்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் இழப்பீட்டு உதவிகள் வரை கோரிக்கைகள் எழுந்துள்ளன. நேற்றைய தினத்தில்கூட பல்வேறு அமைப்பினர் ஒன்று திரண்டதில், ஹாசனில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது.

இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு விவகாரத்தை முன்னிட்டு கர்நாடகத்தில் அரசியல் மோதல்களும் அதிகரித்துள்ளன. பிரஜ்வல் ரேவண்ணா தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தனக்கு எதிரான சதி என்று மறுத்து வருகிறார். இதனிடையே, அவரது கைதினை அடுத்து இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து பிரஜ்வலுக்கு எதிரான வழக்குகளின் தீவிரம் வலுக்கும் எனவும் தெரிய வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in