
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த நாம்தார் உசேன் (34) என்பவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஓசூரிலும் இவர் மீது வழக்குகள் இருப்பதால், நாம்தார் உசேனை கைது செய்ய தமிழ்நாடு போலீஸார் ஆந்திரா சென்றனர்.
நீண்ட தேடலுக்கு பிறகு போலீஸார் அவரை கைது செய்து ஓசூர் அழைத்து வந்தனர். இந்நிலையில் நாம்தார் உசேன் திருடிய திருப்பதி மெஜஸ்டிக் என்ற குடியிருப்பு பகுதிக்கு விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் எப்படி திருடினார் என்று விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த கத்தியை எடுத்த நாம்தார் உசேன், காவலர்கள் மூன்று பேரை கை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது எஸ்.ஐ. வினோத், குற்றவாளியின் காலில் சுட்டு அவரை மடக்கிப் பிடித்தார்.
கத்தியால் குத்தியதில் எஸ்.ஐ. வினோத், தலைமை காவலர் ராமசாமி, முதல் நிலை காவலர் விழியரசு ஆகியோர் காயம் அடைந்தனர். கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வலது காலில் குண்டடிபட்ட நாம்தார் உசேனுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸாரை தாக்கிவிட்டு குற்றவாளி தப்பிச் செல்ல முயன்றதும், அவரை போலீஸார் சுட்டுப்பிடித்தும் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.