
விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரவுடி சிடி மணியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி சிடி மணி என்கிற மணிகண்டன் மீது ஆயுதங்கள் பதுக்கல், துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், போலீசாரை துப்பாக்கியால் சுட்டது என பல வழக்குகள் உள்ளன. திண்டுக்கல் பாண்டியின் சிஷ்யனாக இருந்த சிடி மணி, அவரது மரணத்துக்கு பிறகு ரவுடியாக உருவெடுத்தார்.
இவர் 2007, 2009, 2012, 2015-ம் ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தவர். பின்னர் 2021-ல் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். மேலும், பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டும், ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், சிடி மணி, வாரண்ட் ரீ-கால் செய்ய தனது வழக்கறிஞருடன் அல்லிக்குளம் நீதிமன்றம் வந்தபோது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கிலும் சிடி மணிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
அவரிடம் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், சிடி மணி தற்போது போலீஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.