கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி தேனியில் முதல்வரின் உருவ பொம்மையை சிவசேனா கட்சியினர் எரிக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய 55 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, தமிழ்நாடு அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி அதிமுக, பாஜக மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி அல்லிநகரம் பகுதியில் சிவசேனா கட்சியினர் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியினர், முதலமைச்சரை பதவி விலகக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது திடீரென அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அந்த உருவ பொம்மையை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சியினர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.