கள்ளச்சாராய விவகாரம்: திமுக எம்எல்ஏ-க்களை கைது செய்ய வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் பாமகவினர் சாலைமறியல்

கள்ளக்குறிச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்
கள்ளக்குறிச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்

கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் திமுக எம்எல்ஏ-க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி சென்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

கல்வராயன்மலையில் உற்பத்தி செய்யப்படும் கள்ளச்சாராய விவகாரத்தின் பின்னணியில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள்-உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகிய இருவரும் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். எனவே அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும்" என கூறினார். அன்புமணி ராமதாஸின் இந்தப் பேட்டி திமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழக சட்டப் பேரவை வளாகத்தில் இன்று காலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்எல்ஏ-க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர், தங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சவால் விடுத்தனர்.

திமுக எம்எல்ஏ-க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன்
திமுக எம்எல்ஏ-க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன்

இச்சூழலில் கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் பாமகவினர் 20-க்கும் மேற்பட்டோர், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, "கள்ளச்சாராய உற்பத்தியின் பின்னணியில் உள்ள திமுக எம்எல்ஏ-க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பாமகவினர் சாலை மறியல்
பாமகவினர் சாலை மறியல்

சுமார் 10 நிமிடம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில் தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பாமகவினர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in