கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றுவட்டாரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 51 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2 நாள்களாக தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கருணாபுரம் கிராமத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மதியம் நேரில் சென்று, கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பப் பின்னணி, அவர்களது குடும்பத்தினருக்கு என்ன உதவிகள் தேவைப்படுகின்றன போன்றவற்றை கேட்டறிந்து முடிந்த உதவிகளை செய்து தருவதாக கூறினார்.
இதேபோல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் அன்புணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து, கருணாபுரம் அருகில் உள்ள மற்ற கிராமத்துக்கும் சென்று, கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆறுதல் தெரிவித்தார்.