எமெர்ஜென்சி எனும் இருண்ட காலத்தின் 49-வது ஆண்டு தினம்... காங்கிரஸ் மீது காட்டம் காட்டும் மோடி

மோடி - இந்திரா காந்தி
மோடி - இந்திரா காந்தி

‘அவசரநிலையை அமல்படுத்தியவர்களுக்கு அரசியல் சாசனத்தின் மீது தங்கள் அக்கறையை வெளிப்படுத்த உரிமை இல்லை’ என இந்தியாவில், எமெர்ஜென்சி என்னும் இருண்ட காலம் அமல்படுத்தப்பட்டதன் 49வது ஆண்டு தினத்தில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரதமர் மோடி காட்டம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான இந்தியா காந்தி, 1975 ஜூன் 25 அன்று தேசத்தில் அவசரநிலையை அமல்படுத்தினார். அதையொட்டிய கடுமையான நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி ஊடகங்கள், பொதுமக்கள் என சகலமும் அடுத்த 2 ஆண்டு காலத்துக்கு இயல்பு குலைந்தன. நாட்டின் இருண்ட காலமாக வர்ணிக்கப்படும் அந்த நினைவுகளின் 49வது ஆண்டு தினமான இன்று, காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி பாய்ந்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அதிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியினர் பெரும் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்த மறுநாளில் பிரதமர் மோடியின் பதிலடி அமைந்துள்ளது. ’அவசரநிலையை பிரகடனம் செய்தவர்களுக்கு அரசியல் சாசனத்தின் மீது தங்கள் அன்பை வெளிப்படுத்த உரிமை இல்லை’ என்று மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். ”எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் 49-வது ஆண்டு தினத்தில், காங்கிரஸ் அடிப்படை சுதந்திரத்தை எப்படித் தகர்த்தது மற்றும் அரசியலமைப்பை எவ்வாறு மிதித்தது என்பதை இன்றைய தினம் நமக்கு நினைவூட்டுகிறது” என்றார்.

அப்போதைய காங்கிரஸ் அரசு, "ஒவ்வொரு ஜனநாயகக் கொள்கையையும் புறக்கணித்து, தேசத்தை சிறைச்சாலையாக மாற்றியது. காங்கிரஸுடன் உடன்படாதவர்கள் எமெர்ஜென்சி காலத்தில் சித்ரவதை செய்யப்பட்டாகள். சமூகப் பிற்போக்குக் கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன” என்றும் தனது பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"எமர்ஜென்சியை விதித்தவர்களுக்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த உரிமை இல்லை. இவர்களே 356-வது பிரிவை எண்ணற்ற சந்தர்ப்பங்களில் திணித்து, பத்திரிகை சுதந்திரத்தை அழிக்கும் மசோதாவை நிறைவேற்றி, கூட்டாட்சி முறையை அழித்து, அரசியலமைப்பின் அனைத்து அம்சங்களையும் மீறினார்கள்" எனவும் பிரதமர் மோடி அந்த பதிவில் சாடியுள்ளார்.

"அவசரநிலையை அமல்படுத்துவதற்கு வழிவகுத்த மனநிலை, அதைத் திணித்த அதே கட்சியினரிடையே மிகவும் உயிர்ப்புடன் உள்ளது. அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தங்களது அவமதிப்பை பலவகையிலும் மறைக்கப் பார்க்கிறார்கள். இதனால் இந்திய மக்கள் அவர்களை மீண்டும் மீண்டும் நிராகரித்து வருகின்றனர்" என்று அவர் மேலும் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in