'ராகுல் காந்தி போன்று நடந்து கொள்ளாதீர்கள்' - என்டிஏ எம்பி-க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

என்டிஏ எம்பி-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி
என்டிஏ எம்பி-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி

'ராகுல் காந்தி போன்று நடந்து கொள்ளாதீர்கள்' என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) எம்பி-க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.

18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் விவகாரம், அக்னிவீர் திட்டம், மணிப்பூர் விவகாரம், பாஜக, ஆர்எஸ்எஸ் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆவேசமாக உரையாற்றினார். இதன் காரணமாக ராகுல் காந்திக்கும், பாஜக மூத்த அமைச்சர்களுக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ கூட்டணி எம்பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடந்துகொண்டது போல் நடந்து கொள்ள வேண்டாம் என அனைத்து என்டிஏ எம்பி-க்களுக்கும் பிரதமர் அறிவுறுத்தினார்.

ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, எந்தப் பிரதமரும் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெறாததால், சிலர் அமைதியை இழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி விமர்சித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், "இன்று, பிரதமர் எங்களுக்கு ஒரு முக்கியமான மந்திரத்தை வழங்கினார்.

செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு (நடுவில் இருப்பவர்)
செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு (நடுவில் இருப்பவர்)

ஒவ்வொரு எம்பி-யும் தேசத்திற்கு சேவை செய்வதற்காக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சி வேறுபாடின்றி, நாட்டிற்கு சேவை செய்வதே நமது முதல் பொறுப்பு என பிரதமர் கூறினார். ஒவ்வொரு என்டிஏ எம்பி-யும் நாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும் எனவும், எம்பி-க்களின் நடத்தை குறித்து பிரதமர் எங்களுக்கு நன்கு வழிகாட்டினார்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in