கேரள கோயிலுக்கு பரிசாக வந்த ரோபோ யானை... பீட்டா அமைப்புடன் இணைந்து வழங்கிய நடிகை!

இயந்திர யானை ‘பாலதாசன்’
இயந்திர யானை ‘பாலதாசன்’

கேரளாவின் பௌர்ணமிகாவு கோயிலுக்காக, பீட்டா அமைப்புடன் இணைந்து நடிகை அதா ஷர்மா வழங்கியுள்ள ரோபோ யானை பொதுவெளியில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமிகாவு கோயிலுக்கு, விலங்கு உரிமை அமைப்பான பீட்டா இந்தியா உதவியால், இயந்திர யானை ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. இது கோயிலில் நடைபெறும் வழக்கமான அனைத்து சடங்குகள் மற்றும் விழாக்களிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது என்றும், இதன் மூலம் நிஜமான யானைகள் தங்கள் குடும்பங்களுடன் காடுகளில் தங்க ஏதுவாகும் எனவும் பீட்டா அமைப்பினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக நடிகை அதா ஷர்மா பிரபலமானார். அந்த திரைப்படத்தின் வெற்றி காரணமாக அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடித்ததற்காக வரவேற்புக்கு இணையாக எதிர்ப்புகளையும் கேரள மக்கள் மத்தியில் அதா ஷர்மா பெற்றார். இந்த வகையில் பீட்டா அமைப்புடன் இணைந்த தனது சேவையை, கேரளாவில் நிறைவு செய்ய ஆதா ஷர்மா முன்வந்திருக்கிறார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பீட்டா இந்தியா அமைப்பு, ‘இனி இந்த இயந்திர யானையான பாலதாசன், கோயிலின் அனைத்து விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். உண்மையான யானைகள் தங்கள் குடும்பங்களுடன் அவற்றுக்கு உரிய கானகங்களில் வாழ இனி இயலும்’ என்று பதிவிட்டுள்ளது.

அதே போன்று அதா ஷர்மா வெளியிட்டுள்ள பதிவில் "தொழில்நுட்ப முன்னேற்றம் நமது ஆழமான கலாச்சார மரபுகளையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க அனுமதிக்கிறது. மேலும் ஆபத்தான யானைகளை காட்டில் தங்கள் குடும்பங்களுடன் வாழ அனுமதிக்கிறது. பீட்டா இந்தியாவுடன் இந்த இயந்திர யானையை பங்களிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மனிதர்களுக்கு பாதுகாப்பாகவும், விலங்குகளை மதிக்கும் விதத்திலும், புனிதமான சடங்குகளில் பங்கேற்பதை பின்பற்றுபவர்களுக்கு இது உதவும்" என்று தெரிவித்துள்ளார்.

பாலதாசன் மற்றும் அதா ஷர்மா
பாலதாசன் மற்றும் அதா ஷர்மா

இதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் பௌர்ணமிகாவு ஆலய நிர்வாகத்தினர் "இந்த புனிதமான பௌர்ணமி நாளில், தங்கள் அன்புக்குரியவர்களுடன் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பூமியில் வலம் வர விரும்பும் அனைத்து தெய்வீக உயிரினங்களையும் போற்றும் வகையில் எங்களுடன் இயந்திர யானை பாலதாசன் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

பீட்டா அமைப்பின் இயந்திர யானையை பெறும் கோயில்களில் கேரளாவின் பௌர்ணமிகாவு கோயில் நான்காவது ஆகும். திருச்சூர், கொச்சி மற்றும் கூடலூரில் முந்தைய இயந்திர யானைகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் வரிசையில், யானைகள் துன்பப்படும் பல்வேறு கோயில்களும் இயந்திர யானைகளுக்கு மாறுமாறு பீட்டா இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in