
பெரம்பலூர் பிரவீனா விவகாரத்தில் காவல்துறையிடம் சிக்கியுள்ள அவரது கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (33), பிரவீனா (24) தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜ்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், ராஜ்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இரண்டு முறை அவர் அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறினார். உறவினர்கள் புத்தி சொல்லி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனாலும், ராஜ்குமாருக்கு அந்த பெண்ணை கைவிட முடியவில்லை. அதனால் தனது மனைவி பிரவீனாவை கூலிப்படையை வைத்து கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, ராஜ்குமார் பிரவீனாவை பைக்கில் அழைத்துச் சென்ற போது கூலிப்படையினர் தீர்த்து கட்டினர். தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ராஜ்குமார், தன்னுடைய கையை தானே வெட்டிக்கொண்டு நாடகமாடினார். ஆனாலும் காவல்துறையின் சந்தேகப் பார்வையில் இருந்து அவர் தப்பவில்லை.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு ராஜ்குமார் ஈரோட்டில் குடும்பம் நடத்தியுள்ளார். ஆனால் உறவினர்கள் அவர்களை பிரித்துவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரவீனாவுக்கும், ராஜ்குமாரின் அண்ணி ஆனந்திக்கும் ஒரு முறை பிரச்சினை ஏற்பட்டது.
அப்போது ராஜ்குமாரையும், அவரது அண்ணி ஆனந்தியையும் பிரவீனா துடைப்பத்தால் அடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் பிரவீனாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி கூலிப்படைக்கு 2 லட்ச ரூபாய் தந்து மனைவியை கொலை செய்துள்ளார்.
மனைவியை விட்டு பிரிந்து வராததால், ராஜ்குமார் மீது உறவில் இருந்த மற்றொரு பெண் கோபமாக இருந்துள்ளார். அதனால், ராஜ்குமாரின் செல்போன் எண்ணை ப்ளாக் செய்திருந்தார். இதனால், மனைவியை கொலை செய்யப்போகிறேன் என்று ராஜ்குமார் அனுப்பிய மெசேஜை அவர் பார்க்கவே இல்லை என்று ராஜ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாக்குமூலத்தை அடுத்து, ராஜ்குமார், அவரது அண்ணி ஆனந்திி, கூலிப்படையை சேர்ந்த 7 பேரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.