தினசரி இரவில் 2 மணி நேரம் மின்வெட்டு... நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்!

கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

சென்னை கூடுவாஞ்சேரி அருகே 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மின்வாரிய அலுவலகத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெரும்பாடு நல்லூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக இங்கு அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். குறிப்பாக இரவு வேளைகளில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால், நல்ல உறக்கமின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர்.

கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம்
கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம்

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் அப்பகுதி முழுவதும் சுமார் 2 மணி நேரத்திற்க மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை அழைத்த போது உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு அங்கிருந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதனை நிவர்த்தி செய்யாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் மக்கள் அப்போது எச்சரித்தனர். அப்போது மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in