
ரயில் வர தாமதமானதால் பயணிக்கு சிரமம் ஏற்பட்டதை அடுத்து, அந்த ரயிலில் பயணம் செய்த நபருக்கு 60,000 ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வே துறைக்கு, கேரளத்தில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் கார்த்திக் மோகன் என்பவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ரயில்வே துறையின் சேவை குறித்து புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், சென்னையில் முக்கியமான கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள ஆலப்புழா – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் புக் செய்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
எர்ணாகுளத்தில் ரயிலில் ஏறுவதற்காக காத்திருந்த நிலையில், 13 மணி நேரம் ரயில் தாமதமாக வந்தது என்றும், இதனால் நீட் தேர்வு எழுத செல்ல இருந்த மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டதாக கூறினார்.
அரக்கோணத்தில் மேற்கொண்ட மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ரயில் தாமதமானதாக ரயில்வே விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக அனைவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது என்றும், டிக்கெட் தொகை திரும்ப தரப்படும் என்று கூறியதாகவும் ரயில்வே துறை தெரிவித்திருந்தது.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், ரயிலில் பயணம் செய்யும் பயணியின் நேரம் என்பது மிக முக்கியமானது, பொதுத்துறை நிறுவனமான ரயில்வே சரியான நேரத்தில் சேவை வழங்க முன்னுரிமை அளிப்பது அவசியம் என தெரிவித்தது.
புகார்தாரர் மன வேதனை, பண இழப்பு உள்ளிட்ட பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார், எனவே அதற்கு இழப்பீடாக அவருக்கு ரயில்வே நிர்வாகம் 60,000 ரூபாய் நிவாரணம் வழங்க எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.