நீட், பல்கலைக்கழக பேராசிரியர் தேர்வு(நெட்) தேர்வு முறைகேடு நடந்துள்ள பரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களையும் பெற்றதால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. 234 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சிகளாக மக்களவையில் இந்தியா கூட்டணி அமருகிறது. இந்த சூழலில் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், மக்களவையின் இடைக்கால சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ள பர்த்ருஹரி மகதாப்க்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்லும் பர்த்ருஹரி மகதாப், காலை 11 மணிக்கு மக்களவையை கூட்ட உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று பதவியேற்க உள்ளனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது தற்காலிக சபாநாயகர் தேர்வு, நீட் தேர்வு முறைகேடு, பல்கலைக்கழக பேராசிரியர் தேர்வு (நெட்) முறைகேடு, முதுகலை நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மக்களவை தற்காலிக சபாநாயகருக்கு உதவி செய்யும் குழுவின் 3 உறுப்பினர் பொறுப்புகளையும் ஏற்காமல் நிராகரிப்பதாக இந்தியா கூட்டணி அறிவித்திருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறைக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.