ஒற்றுமையால் மீட்டெடுப்போம்... அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய ஓபிஎஸ் அறைகூவல்!

இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன்
இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன்

அதிமுக ஆட்சியை ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம் எனவும் மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம் எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக, அமமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆகிய கட்சிகள் தனித்தனியாக தேர்தலை எதிர்கொண்டன. இதில் அமமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு ஆகியவை பாஜக கூட்டணியில் இணைந்து இருந்தன. அமமுக இரண்டு தொகுதிகளிலும், ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட்டு இருந்த நிலையில், அதிமுக உட்பட இந்த அணிகள் அனைத்தும் முற்றிலும் தோல்வியை சந்தித்தன.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசி இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில் தற்போது முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அந்த அறிக்கையில், ’ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம். கத்தை குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஒரு வழி நின்று, நேர்வழி சென்றால், நாளை நமதே என்ற முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் மந்திர மொழியை மருந்தாக கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரம் ஆக்கிட, மனமாட்சியம் மறந்து ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம்.’

ஓபிஎஸ், இபிஎஸ்
ஓபிஎஸ், இபிஎஸ்

‘முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்தி போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும், ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய அனைத்து அணிகளும் ஒன்றிணைவதற்கு அவர் அறைகூவல் விடுத்து இருப்பதாக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in