இந்தியாவின் துயரம்: மாநில தடகள போட்டியில் ஒருவர் மட்டுமே பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்!
டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் ஒருவர் மட்டும் பங்கேற்ற அதிசயம் நடந்துள்ளது. போட்டி துவங்கியதும் அவர் மட்டுமே மைதானத்தில் ஓடினார். எல்லைக் கோட்டை ஓடிச்சென்று அடைந்த அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
மாநில அளவிலான தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் நேற்று நடைபெற்ற இறுதி போட்டிக்கு அவர்களில் ஏழு பேர் வரவில்லை. மாநில அளவிலான முக்கியமான போட்டி என்பதால் எல்லோருமே கலந்து கொள்வார்கள். சமயங்களில், ஒருவர், இரண்டு பேர் வராமல் போவது கூட சாத்தியம் தான். ஆனால் எப்படி ஏழு பேர் வராமல் இருப்பார்கள்?
அதன்பிறகே தெரிந்தது ஏழு பேர் வராமல் இல்லை, வந்துவிட்டு பிறகு அங்கிருந்து போட்டியில் கலந்து கொள்ளாமல் ஓட்டம் பிடித்துள்ளனர் என்று. ஏனென்றால் இறுதிப்போட்டியில் பங்கேற்க இருந்த 8 பேருக்கும் ஊக்கமருந்து பரிசோதனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த வீரர்கள் ஏழு பேர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போட்டியில் பங்கேற்காமல் தப்பியோடினால், பதக்கம் தான் போகும், பங்கேற்று சோதனையில் பிடிபட்டால் விளையாடுவதற்கு தடையே விதிக்க நேரிடும் என்பதால், வீரர்கள் ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், லலித் குமார் என்ற ஒரு வீரர் மட்டுமே ஊக்க மருந்து பரிசோதனைக்கு வந்து, போட்டியில் பங்கேற்று, அவர் மட்டுமே ஓடி சென்று தங்கப்பதக்கத்தையும் வென்றார். தொடர்ந்து பேசிய அவர், இதே போல் ஒவ்வொரு ஆண்டும் ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.