இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் 400 சதவீதத்துக்கும் மேல் உயர்வு; அதிர்ச்சியளிக்கும் ஆர்பிஐ தகவல்

இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆண்டறிக்கையின்படி, இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகள் 400 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பணப் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மொபைல் போன்கள் மூலம் பயனர்கள் உடனடியாக பணப்பரிமாற்றம் செய்யும் வசதி எளிதாக இருப்பதால் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேநேரத்தில் நன்மை இருந்தால் தீமையும் இருக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில், டிஜிட்டல் பேமெண்ட்ஸ் முறையிலும் இது தவிர்க்க இயலாததாக உள்ளது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

கடந்த 2 ஆண்டுகளில் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளின் மதிப்பு 137 சதவீதம் உயர்ந்து 200 டிரில்லியன் ரூபாயாக உள்ளது என ஆர்பிஐ தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மோசடி கடந்த நிதி ஆண்டில் 14.57 பில்லியன் ரூபாயாக (175 மில்லியன் டாலர் ) அதிகரித்துள்ளது. இது ஓராண்டில் 400 சதவீத உயர்வு என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கார்டுகள் மற்றும் இணையப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மொத்த மோசடித் தொகையில் 10.4 % ஆகும். இது 2022 -23 நிதியாண்டில் 1.1% ஆக இருந்தது.

எளிதான இணைய வசதி, அதிக நிதி உள்ளடக்கம் போன்றவை நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிக்க வழிவகுத்துள்ளன.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

இந்நிலையில் டிஜிட்டல் பேமெண்ட்டுகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இதை மோசடி செய்பவர்கள் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கின்றனர் என மோசடி கண்டறிதல் தளம் ஒன்றின் வளர்ச்சிப் பிரிவுத் தலைவர் நிகில் ஜோயிஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நிதி கல்வியறிவு பற்றாக்குறை, தொழில்நுட்பத்தின் விவேகமற்ற பயன்பாடு ஆகியவற்றால் பரந்த மக்கள் இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்படுகின்றனர்.

மோசடி செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிநவீனமாகி வருகின்றனர். அதே நேரத்தில் சந்தைப் பங்கு மற்றும் வளர்ச்சிக்காகத் துடிக்கும் நிதி நிறுவனங்களும் ஃபின்டெக் நிறுவனங்களும் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன" என்றார்.

ஆர்பிஐ வெளியிடும் எச்சரிக்கை விளம்பரம்
ஆர்பிஐ வெளியிடும் எச்சரிக்கை விளம்பரம்

மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்யும் போது ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு விளம்பரங்கள் வாயிலாக நிதி மோசடிகள் குறித்து நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை, விழிப்புணர்வு ஏற்படுத்த ஆர்பிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in