கைது செய்யப்பட்ட கலீல், சூரிய பிரகாஷ்
கைது செய்யப்பட்ட கலீல், சூரிய பிரகாஷ்

அதிர்ச்சி... போலீஸார் போல் வேடமணிந்து காதலர்களை குறித்து வைத்து கொள்ளை!

சென்னை ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் காதலர்களைக் குறி வைத்து, போலீஸார் போல வேடம் அணிந்து பணம் பறித்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் முகமது(27). இவர் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பிற்பகல் 2 மணிக்கு மேல் பணிக்கு செல்லும் இவர், தினமும் நள்ளிரவு 12 மணியளவில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனது காதலியுடன் இரவு வீடு திரும்பியுள்ளார்.

இவர்கள் கோவளம் அருகே சென்ற போது, போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் வந்த இரண்டு பேர் இவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது, முகமதுவிடம், கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதும், அக்கவுண்டில் இருந்து எடுத்துக் கொடுங்கள். இல்லை என்றால் காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைப்போம் என மிரட்டியுள்ளனர்.

இதில் பயந்து போன காதலர்கள், ஏடிஎம்மில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளனர். அந்த நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரிடமும் விசாரிக்க, அவர்கள், “நாங்கள் போலீஸ்... நீங்கள் யார்?” என காவல்துறையினரிடமே கேட்டுள்ளனர். உடனே போலீசார் அவ்விருவரையும் பிடித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

இதில் ஒருவர் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கலீல் (வயது 42). மற்றொருவர் அவரது நண்பர் சூரிய பிரகாஷ் (வயது 26) பிஇ பட்டதாரி என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸார், திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் துரைப்பாக்கம் சுற்று வட்டாரப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in