தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலித்து விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தொடர் பண்டிகைகால விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளின் அட்ராசிட்டி சொல்லி மாளாது. கடந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு விதிமீறல்களில் ஈடுபட்ட 119 ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்து அதிகாரிகள் அதிரடி காட்டிய நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலித்து விதி மீறலில் ஈடுபட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாகவே எச்சரித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து விதிமீறல்களை முறையாக கண்காணித்து வந்தனர். தீபாவளி நாட்களில் ஆம்னி பேருந்துகள் சாதாரண கட்டணத்திலேயே இயங்கின. சில பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தன. கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கூடுதலாக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.